“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.”
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்த மின் துண்டிப்பு குறித்து இந்தச் சபையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது தொடர்பில் அரசாங்கத் தரப்பில் பதில் வழங்க வேண்டும்.
புதிய உற்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம்.” – என்றார்.
………………..
இன்று முதல் தடையின்றி மின் விநியோகம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு
இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன.
இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு நேரிட்டது.
இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்று முன்தினம் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படவில்லை.
அதேநேரம் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் நேற்றைய தினம் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்பட்டது.
செயலிழந்த 3 மின் பிறப்பாக்கிகளை இன்றைய தினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நேற்று பிற்பகல் வரை செயற்படாமல் இருந்த மின்பிறப்பாக்கிகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மின் விநியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.