2009 முள்ளிவாய்க்கால் யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக கொண்டு ஈழத் தமிழர்களையும் அவர்களது அரசியல் உரிமைசார் விடயங்களையும் துடிப்புடன் கொண்டு செல்லக் கூடிய இளைய தலைமைத்துவத்திற்கு முதியவர்கள் வழிவிட தவறி விட்டனர். அத்துடன் முதியவர்கள் கொண்டுவந்த இளையவர்கள் வெறுமனே டீலர்களாவே செயற்படுகின்றனர் லீடர்களாக அவர்கள் தங்களை நிரூபிக்க தவறி விட்டனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பெயர் அளவிலான பதவி நிலைக்குரியவர்களே தவிர இனத்தின் உரிமைப் போராட்டத்தில் தீவிரமாக செயற்படக் கூடியவர்களாக தற்போது இல்லை. வயதின் மூப்பும் உடற் தளர்வும் நீண்டகாலமாக தலைமையை வைத்து புதிய மாற்றங்களை மேற்கொள்ள இயலாது போனமையும் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டமையும் தமிழ்த் தேசியத்தின் ஐனநாயக பலம் பின்னடைவை சந்திப்பதற்கு வழி கோலியுள்ளது.
புதிய இளம் இரத்தம் தலைமைக்கான புதிய முகம் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயம்.
தனிப்பட நலன்கள் ஈகோக்கள் மற்றும் சாகும்வரை பதவி வெறி இவற்றை அதிகமாக கொண்ட முதியவர்களான தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் இளையோருக்கு இடம் கொடுக்க தொடர்ந்து தவறினால் புதிய தலைமுறை அரசியல் பற்றுதி அற்றவர்களாக அந்நியப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைப் பதவிகளில் இளையோர் உள்வாங்கப்படும் போது தான் தமிழ் இனத்திற்கான உறுதியான துணிச்சலான தலைமையை மக்கள் இனம்காண முடியும் என தெரிவித்தார்.