உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மக்களுக்குப் பொய் மூட்டை; அநுர அரசை கிழித்தெறிந்த ஐக்கிய மக்கள் சக்தி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்குப் பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டினார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசு மீண்டும் ஒருமுறை பஸ் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், கப்பலில் இருந்து இறக்கப்படும் விலையிலேயே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றும், அமைச்சர்களின் எரிபொருள் தரகுப் பணம் ஒழிக்கப்படும் என்றும், மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்றும் பிரசாரம் செய்தது. ஆனால், இன்று எரிபொருள் விலை சுமார் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலையை மிகக் குறைந்த தொகையினால் அரசு குறைத்திருந்த போதிலும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது விலையை உயர்த்தும் அரசு, உலக சந்தையில் விலை குறையும் போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில்லை.

உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது ஒரு விலைச் சூத்திரமும், விலை குறையும் போது மற்றொரு விலைச் சூத்திரமும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த விலை சூத்திரங்கள் மக்கள் விடுதலை முன்னணிகட்சி அலுவலகத்தில் தயாரிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முறையான விலைச் சூத்திரம் பயன்படுத்தப்பட்டால் இவ்வாறு நடக்காது.

மத்திய கிழக்குப் போருக்கு முன்னர் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 281 ரூபாவாக இருந்ததுடன், போரைக் காரணம் காட்டி அது 382 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. உலக நாடுகள் போர் முடிவடைந்ததும் டீசல் விலையைக் குறைத்த போதிலும் எமது அரசு அதனைக் குறைக்கவில்லை. அதேபோல், 293 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 92 ரக பெற்றோல் தற்போது 414 ரூபாவாக உயர்ந்துள்ளது. மக்களுக்கு வாழ முடியாத ஒரு எரிபொருள் விலைச் சூத்திரத்தையே அரசு உருவாக்கியுள்ளது.

ஒரு மாதத்துக்குள் மூன்று தடவைகள் எரிபொருள் விலையை உயர்த்திய அரசு, உலக சந்தையில் விலை வீழ்ச்சியடைந்த போது மூன்று தடவைகள் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இதன் மூலம் அரசு அதிக இலாபம் ஈட்டுவதுடன், தனியார் எரிபொருள் இறக்குமதி நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட இலாபம் கிடைக்கின்றது.

மேலும், 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் நுகர்வோருக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. தற்போது நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அது ஏழை மக்களைப் பாரியளவில் பாதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

எனவே, எரிபொருள் விலை குறைந்ததன் நன்மையை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும். கியூ.ஆர். முறைமை மற்றும் ஒற்றை இரட்டை இலக்க முறைகளின் கீழ் எரிபொருள் விநியோகிப்பது அவசியமற்றது. இந்தக் கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைச் சுருக்குவதால் இவற்றை அரசு உடனடியாக நீக்க வேண்டும்.

நாட்டில் டெங்கு நோய் தற்போது ஒரு மரண அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ளன. டெங்குவைக் கட்டுப்படுத்த அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் டெங்கு ஒழிப்புக்கான எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. மத்திய அரசும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழிகாட்டல்களையோ அல்லது தரமான இயந்திர உபகரணங்களையோ வழங்கவில்லை.

டெங்குவை ஒழிப்பதில் இந்த அரசுக்கு எந்தவொரு அனுபவமும் இல்லை. தொழிற்சங்கத் தலைவர்களே உள்ளூராட்சி மன்றங்களின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான தீர்மானங்களை எடுப்பதற்கான அறிவு இல்லை. இதன் விளைவாக நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதேநேரம், விவசாயிகள் இன்று பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் உரங்களை வழங்கவோ அல்லது நெல்லைக் கொள்வனவு செய்யவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லுக்கான நிலையான விலையைத் தீர்மானிக்கக் கூட அரசால் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி விவசாயிகளை முற்றாக ஏமாற்றியுள்ளது.

‘விவசாயி உலகுக்கு ராஜா’ எனக் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், இன்று விவசாயிகளைக் ‘கசிப்பு வியாபாரிகள்’ என அவமதித்து வருகின்றனர். விவசாயிகளின் தோள் மீது ஏறி ஆட்சிப் பீடமேறிய தேசிய மக்கள் சக்தி இன்று விவசாயிகளை மறந்துவிட்டனர்.

எனவே, ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு, நலிவடைந்துள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0