கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த நீர்விநியோகத் தடையானது நாளை( 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிக்காவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்தை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.










