மனிதர்களின் செயற்பாடுகளால் (காடழிப்பு) யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதனாலேயே அவை கிராமங்களை நோக்கி வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் யானை மனித மோதலை கட்டுப்படுத்த சிரமதான நிகழ்வு மற்றும் மரநடுகை உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி என்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேசத்தின் கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது யானை மனித மோதலுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் உறுகாமம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உறுகாமம் சுபைர் வித்தியாலயத்தில் பொது மக்களுக்கு யானை மனித மோதலைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், மரம் நடுகை நிகழ்வு மற்றும் யானைகள் அதிகம் நடமாடும் வீதியோரத்தில் உள்ள பற்றைக்காடுகளை துப்பரவு செய்து சிரமதானம் என்பனவும் இடம்பெற்றன.
இதன்போது யானை தாக்குதல்களிலிருந்து இரவு வேளைகளில் பாதுகாக்கும் வகையில் வீதி மின்விளக்குகளும் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த சுரேஸ்குமார்,
இந்த உறுகாமம் பிரதேசம் யானை – மனித மோதலால் அதிகளவு பாதிப்புக்குள்ளான பிரதேசமாகக் காணப்படுகின்றது. நான் நினைக்கிறேன், ஒரு 10 வருடங்களுக்கு முன்னர் இந்த உறுகாமம் பிரதேசத்தைச் சுற்றி ஒரு யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த யானை வேலி உறுகாமம், கித்துள் போன்ற கிராமங்களைப் பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த போதிலும், யானை வேலி பராமரிப்பு உறுகாமம் பிரதேசத்துக்குள் தற்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஏன் அவ்வாறு நடக்கிறது என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தால், குறித்த அந்த யானைக்குரிய இருப்பிடம் காட்டிலில்லை. அதற்குரிய உணவுத் தேவை இல்லை. காரணம், சனத்தொகை வளர்ச்சி காரணமாக நம் மனித செயற்பாடு காட்டை நோக்கி முன்னேறி, அங்குள்ள மரங்களை, அதன் வாழ்விடங்களை அழித்த காரணத்தினால் அதன் பலாபலனை நாம் தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? மரங்களை நட வேண்டும். காடழிப்பைத் தடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாட்டைச் செயற்படுத்துவதன் மூலம், குறித்த உயிரினங்களுக்கு, உதாரணமாக யானைகளுக்குரிய வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனை அழிவிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்கும் என்பது ஒரு யதார்த்தம்.
நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரமாவது இன்றைய தினத்தில் நமது வீட்டில் நாட்ட வேண்டும். எனக்குத் தெரியும் இந்த உறுகாமம் பிரதேசம் தண்ணீருக்கு மிகவும் கஷ்டமான பிரதேசம். அவ்வாறு இருந்தும் கூட, இந்த உறுகாமம் பிரதேசத்தில் நான் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பார்த்தால், ஏதாவது ஒரு மூலையில் ஒரு தேசிய மரமாவது நட்டி வைப்பார்கள். அவ்வாறான ஒரு தொழில் முயற்சியாளர்கள் வாழ்கின்ற இடம்தான் இந்த உறுகாமம். தேனீ வளர்ப்பு போன்றவை இன்னும் ஞாபகம் இருக்கிறது.
யானைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, மக்களுடைய வாழ்வாதாரங்களை அரசாங்கம் கட்டியெழுப்பிக் கொடுத்த போதிலும், இந்த யானையினால் அவை அழிக்கப்படுகின்றன. அவற்றைப் பாதுகாப்பது எப்படி என்று பல திட்டங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் யானை வேலி மற்றும் யானையால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான நட்டஈடுகள், குறிப்பாக இவ்வருடம் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கும் மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல சேவைகளை வனஜீவராசிகள் திணைக்களம் செய்த போதிலும், இந்த யானை – மனித மோதலைக் குறைப்பதற்கு பொதுமக்களாகிய உங்களது பங்களிப்பு நூற்றுக்கு நூறு வீதம் அவசியம்.
வனஜீவராசிகள் திணைக்களம் மாத்திரம் எதையும் செய்ய முடியாது. பொதுமக்களுடைய பங்களிப்பும், ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பும் இருந்தால் மாத்திரமே குறிப்பிட்ட இந்த யானை – மனித மோதலைத் தடுக்கக் கூடியதாக இருக்கும்.













