வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் மட்டுமே வழங்கப்படும் என காப்புறுதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விபரங்களை அறிய ‘1338’ என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற டிஜிட்டல் காப்புறுதி அட்டை தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கத்தின் பொதுக் காப்புறுதி மன்றத்தின் தலைவர் தினூஷ திலங்க இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
வாகன உரிமையாளர்களுக்குத் தற்போது தங்களது வாகனங்களுக்காக வழங்கப்படும் அச்சிடப்பட்ட வடிவிலான (Printed) காப்புறுதி அட்டைகள் இனிமேல் வழங்கப்பட மாட்டாது என்று தினூஷ திலங்க குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து அதற்குரிய டிஜிட்டல் அட்டை (Digital Insurance Card) மாத்திரமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்த புதிய டிஜிட்டல் காப்புறுதி அட்டையை வாகன உரிமையாளர்கள் தங்களது கைபேசிகள் , இணையதளம் அல்லது QR குறியீடுகள் மூலமாக மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் விளக்கமளித்தார்.
அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட டிஜிட்டல் காப்புறுதி அட்டையின் விபரங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எவ்விடத்திலிருந்தும் மிகவும் நம்பகத்தன்மையுடன் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இந்த டிஜிட்டல் காப்புறுதிச் சேவை தொடர்பான விபரங்கள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ‘1338’ என்ற புதிய உடனடி அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
பொதுமக்கள் இந்த இலக்கத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பொதுக் காப்புறுதி மன்றத்தின் தலைவர் தினூஷ திலங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.










