மட்டு. ஏறாவூர் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடங்களாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் ஒருவரை 5 கிராம் 410 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் இன்று (06) கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவ தினமான இன்று காலை ஏறாவூர் கலைமகள் பாடசாலை வீதியில் பொலிஸார் புலனாய்வு பிரிவினர் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்போது ஜஸ் போதைப்பொருளை வியாபாரத்திற்கு எடுத்துக் கொண்டு சென்ற நிலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் குறித்த வியாபாரியை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்ததுடன் இவரிடமிருந்து 5 கிராம் 410 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டனர்.
குறித்த நபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்துள்ள நிலையில் விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது தலைமறைவாகி வந்ததுடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் ஏற்கனவே ஜஸ் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராக நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ சீருடை இராணுவ முகாமில் வழங்காது வைத்திருந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரின் வீட்டில் இருந்து இராணுவ சீருடையை மீட்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











