“இலங்கையில் புதிய அரசு வந்ததும் பாதாள உலகக் கும்பலின் சக்தி பலவீனமடைந்துள்ளது. இந்தப் புதிய அரசு பொலிஸாருக்கு வழங்கிய உதவிகளால் இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலின் 6 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசு வந்ததும் பாதாள உலகக் கும்பலின் சக்தி பலவீனமடைந்தது. இதனால்தான் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.
முன்னர் பாதாள உலகக் கும்பல்களுக்கு பல அரசியல்வாதிகள் துணைபுரிந்தனர். எனவேதான் பாதாள உலகக் கும்பல்கள் எமது நாட்டில் பல குற்றச் செயல்களை மேற்கொண்டு பலத்துடன் இருந்தனர். ஆனால், புதிய அரசு வந்ததும் பாதாள உலகக் கும்பலின் சக்தி பலவீனமடைந்தது.
பாதாள உலகக் கும்பல்களை கைது செய்ய புதிய அரசு பொலிஸாருக்கு பல உதவிகளை வழங்கியது.
பல அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களைத் தாண்டி இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் காலங்களிலும் இந்தக் கைது நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.










