‘முத்து நகர் மக்களின் விவசாயக் காணிகளில் பல வருடங்களாக விவசாய பயிர்ச்செய்கை செய்துள்ளனர். ஆனால் தற்போது இந்த அரசாங்கம் காணிகளை சூறையாடியுள்ள வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அந்த அடிப்படையில் அரசாங்கத்தை நம்பிய இந்த முத்து நகர் மக்களை ஏமாற்றியுள்ளனர்’ என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
‘திருகோணமலை பட்டினமும் சூழலும்’ பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாயக் காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சோலர் திட்டத்துக்கு வழங்கியுள்ள நிலையில் குறித்த பகுதிக்கு இன்று (17) மாலை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதுடன் சோலர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இடங்களையும் பார்வையிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ‘குறிப்பாக சென்ற ஜனாதிபதித் தேர்தலில் பகிரங்கமாக மேடைகளில் சொன்ன விடயம் தான் முத்து நகர் மக்களை எழுப்பப் போவது கிடையாது. அந்த மக்கள் நிம்மதியாக பயிர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறிவிட்டு ஆட்சியமைத்ததன் பின் தற்போது பழி வாங்கப்பட்டு நீதிமன்ற வழக்குகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
தற்போது மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. 1972 ஆம் ஆண்டு முதல் இந்த மக்கள் இங்கு விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றார்கள். ஆனால் எந்த விதியும் இன்றி வெளியேறச் சொன்னால் எங்கே போவார்கள் என அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் தான் சென்ற காலங்களில் மக்களை இனி வீதியில் இறக்கமாட்டோம், ஆர்ப்பாட்டம் செய்ய நாட்டில் இடமளியோம், மக்களுக்கான அரசாங்கம் எனக் கூறி வேறு வெளிநாட்டு கம்பனிகளினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் (IMF) கோரிக்கைகளுக்குள் மாட்டி தத்தளித்து மக்களை துன்புறுத்துகின்றனர்.
இதனை விடுத்து அரசாங்கம் கருணை செய்து மக்களது காணிகளை வழங்க அரசாங்கமும், ஜனாதிபதியும் இவ் விடயத்தில் செயற்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக காணப்படுகிறது’ என்றார்.













