வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தண்ணீர் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் மோட்டாருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் உள்ள வீட்டில் 3 பெண்கள் தனியாக இருந்தவேளை நேற்றையதினம் (17) அதிகாலை குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் உள்ள களஞ்சியசாலையின் ஓட்டினை பிரித்து இறங்கி மோட்டாரினை திருடியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினமே அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்து விசாரித்தன் அடிப்படையில் மோட்டாரினை மீட்டனர்.
பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்ற விடயம் மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும், விளக்கமறியல் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.