மித்தெனிய பகுதியில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மித்தெனிய பொலிஸ் பிரிவின் கடேவத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் கொல்லப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாதோரால், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 39 வயதான “கஜ்ஜா” என்று அருண விதானகமகே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது 6 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோரும் படுகாயமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன், இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மித்தெனிய பொலிஸார் மற்றும் தங்காலை குற்றவியல் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், இராணுவத்திலிருந்து தப்பியோடி பின்னர் சட்டப்பூர்வமாக வெளியேறிய இரண்டு முன்னாள் இராணுவ உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.