இலங்கையில் முதன் முதலாக பாராளுமன்ற உப முதற்கோலாசானாக வன்னி எம்.பி ஜெகதீஸ்வரன் நியமனம்
இலங்கையில் முதன் முதலாக பாராளுமன்ற ஆளும் கட்சியின் உப முதற்கோலாசானாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் இலங்கைப் பாராளுமன்ற அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றாகும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அரசாங்கப் பணிகளுக்கு முக்கியத்துவமளித்து அரசாங்கக் கட்சியின் அனைத்துப் பணிகளையும் திட்டமிடல், ஒழுங்குசெய்தல் மற்றும் அப்பணிகளை மேற்கொள்வதை ஒருங்கிணைப்புச் செய்தல், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்புச் செய்தல் என்பன இந்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் ஏனைய அனைத்துத் திணைக்களங்கள் என்பவற்றுடன் பரஸ்பர நட்புடன் உள்ளகப் பணிகளை ஒருங்கிணைப்புச் செய்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.
அவ்வாறே, அரசாங்கக் கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றிய விழிப்பூட்டல், குழுக் கூட்டங்களுக்கு அழைத்தல், எதிர்வரும் காலங்களுக்குரிய நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட ஏனைய விசேட சந்தர்ப்பங்களின் போதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தல் என்பன அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அலுவலகத்தின் பிரதான பொறுப்பாகும்.
ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை கவனத்திற்கொள்ளும் போது அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அலுவலகம் என்பது, பாராளுமன்றத்தின் உள்ளே மிகவும் முக்கியத்துவமிக்க பணிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாக அமைந்துள்ளதுடன், அதன் போது அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளமையால் பிரதி முதற்கோலாசான்கள் இருவர் மற்றும் உதவி முதற்கோலாசான்கள் மூவர் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ம.ஜெகதீஸ்வரன் உப முதற்கோலாசானாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் இந்த நியமனத்தை வழங்கி வைத்துள்ளார். இலங்கை வரலாற்றில் தமிழர் ஒருவர் இப் பதவியை பெறுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.