வெறுங்கை என்பது மூடத்தனம்… விரல்கள் பத்தும் மூலதனம்…” என்ற தாராபாரதியின் வரிகளை கருத்தில் கொண்டு சுயதொழில் செய்து வருகிறார் லக்ஸ்மி. இயற்கையான முறையில் குளியல் சோப், ஷாம்பூ ஆகியவற்றை தயாரிக்கும் இவர் அவற்றை இணையத்தில் விளம்பரப்படுத்தி தனது தொழிலை பலப்படுத்தி வருகிறார்.
கணவன், குடும்பம், சமூகம் இப்படி… பல்வேறு கடமைகளையும் தாண்டி சாதித்துக் காட்டிய பாரதி கண்ட புதுமைப் பெண் கணேசமூர்த்தி லஷ்சுமி
நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்…, என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி. அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற எண்ணம் … உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. பெண் விடுதலைக்காக உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு மத்தியில் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள தோணிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி லஷ்சுமி. அவருடைய கணவர் யுத்தத்தினால் காணாமலாக்கப்பட்டவர் பெண் தலைமைத்துவக் குடும்பத்தை சேர்ந்தவர் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவர், தனது முன்னோர்களிடம் கற்றறிந்த அனுபவம் மூலமாகவும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மூலமாக இன்ஸ்டியூட்டில் சிறப்பு பயிற்சி பெற்றதன் மூலமாகவும் சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகிறார். ஆரம்பத்தில் தனது சொந்த தேவைக்காக மட்டுமே பொருட்களை தயாரித்து உபயோகப்படுத்தி வந்த இவரின் பணி, தற்போது “( லக்ஷ்மி”) LUXMY PRODUCTS ..என்ற பெயரில் வியாபாரமாகமாறி நிற்கிறது.
பொதுவாக வியாபாரம் நடைபெற உயர்வடைய விளம்பரம் முக்கியமானதாக அமையும் ஆனால் இங்கு, தரமும் கவர்ச்சியும், நுகர்வோரை ஈர்க்கும் விதமும் அத்தியாவாசியமானதாய் இருக்கிறது. இதனால் பெரும்பான்மையான, வாடிக்கையாளர் நேரடியாக சந்தித்து தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். தற்போது இவர் தயாரித்த பொருட்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர்.
இயற்கை மற்றும் உடலுக்கு கேடுவிளைவிக்காத பொருட்களை தற்போது மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றையே பலரும் விரும்புகிறார்கள்.
கடைகளில் தயாரிக்கப்படும் குளியல் சோப்புகள் அதிக நாட்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும். என்பதற்காகவும் மக்களை கவர நறுமணம் வேண்டும், அழுக்குகளை நீக்கி பளிச்சென காட்ட வேண்டும் என்பதற்காகவும் செயற்கையான முறையில் ஏராளமான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். எனவே, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரித்து ஆரோக்கியமாகவும், அப்பொருட்களை விற்பனை செய்து நிரந்தர வருமானத்தையும் பார்க்க முடியும் என்கிறார் லக்ஷ்மி. தனது திறமையை வெளிக்காட்ட ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும் என்று எண்ணி முதலில் பொழுதுபோக்காக தொடங்கியது நாளடைவில் இதனுடைய முக்கியத்துவம் அறிந்து இதனையே தன்னுடைய அடையாளமாக மாற்ற முயற்சித்துள்ளார். இன்று LUXMY PRODUCTS நிறுவனமாக ஒரு தொழில் முனைவர் என்ற அடையாளத்தையும் உருவாக்கியுள்ளார். 10 க்கும் மேற்பட்ட வகையான சோப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றார். இதில் எவ்வித வேதிப்பொருட்களும் பயன்படுத்துவதில்லை. குடும்பம் வேலை இரண்டையும் சமாளித்துக் கொள்வது சற்று சவாலாக இருந்தாலும், பிடித்தவற்றை செய்யும் பொழுது அதற்கான நேரத்தை நம்மால் சரியான முறையில் நேர மேலாண்மையை பயன்படுத்திக்கொள்ள முடியும்
வயல்வெளிகள், வீட்டுத்தோட்டம், காடுகளில் கிடைக்கக்கூடிய முடக்கத்தான் இலை, நாயுருவி இலை, குப்பை மேனி, செம்பருத்தி, மருதாணி, வேப்பிலை, கற்றாழை, நெல்லிக்காய், பப்பாளி, தேங்காய், சந்தனம், வேப்பிலை, தேங்காய் பால், பப்பாளி, நலுங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள், நுணா, நாயுருவி, கற்றாழை, ரெட் ஒயின் உள்ளிட்ட இயற்கை பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு எல்லாப் பொருட்களையும் தயார் செய்கிறோம். இயற்கையாக கிடைக்கும் தூதுவளை, கற்றாழை, ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், சங்குப்பூ, ரோஜா இதழ்கள் போன்றவற்றை நம்மை சுற்றி கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தியே குறைந்த பொருட்களின் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்ளவும், சருமத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் என்னுடைய தயாரிப்புகளை செய்து வருகிறேன்.






