சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில் இன்றையதினமும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விகாரையானது மக்களின் காணிகளை அனுமதியில்லாது அபகரித்து கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கடந்த 31.01.2025 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த விகாரை தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்தபோது, அந்த விகாரை அமைந்துள்ள காணிக்கு பதிலாக மாற்றுக்காணிகளை பெறுவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநரும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் தெரிவித்திருந்தனர்.
இந்த கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குறித்த விகாரைக்கு எதிராக போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவினை தெரிவித்து இருந்தனர்.
அந்தவகையில் குறித்த போராட்டமானது இன்றையதினம் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் காணியின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், சமூகமட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.









