இந்திய இழுவை மடி படகுகளை தமிழ் நாடு அரசு தனது எல்லையில் வைத்து கண்காணிக்க வேண்டுமென வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடமராட்சியில் இன்று 03.1.2025 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இந்தியன் இழுவை மடி படகுகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் தொடர்பாக இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை விடுத்து தமது மீனவர்களை இந்திய கடற்படையை கொண்டு கண்காணித்தால் அவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை கண்டறியமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் எதனையும் பொருட்படுத்தாமல் இந்தியன் இழுவை மடி படகுகள் கரைக்கு அண்மையாக வந்து கடல் வளத்தை கொள்ளையடித்து செல்வதாகவும், அவர்களில் சிலரை கைது செய்தால் தமிழ் நாட்டில் வீண் போராட்டங்களை நடாத்துவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை கடற்படை தனது கடலை கண்காணிப்பதை போன்று தமிழ் நாட்டு அரசாங்கம் தனது மீனவர்களை கண்காணித்து இந்தியன் இழுவை மடி படகுகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.