நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு அமைதியான காலம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடாத்த முடியாது.
மேலும், இந்த காலகட்டத்தில் பொலிஸார் நாடு முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அத்துடன் புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.