“தேர்தல் காலத்தில் இனவாதிகள், படுகொலையாளர்கள் மற்றும் அரச நிதி மோசடியாளர்கள் அனைவரும் தங்களது அணியுடன் ஒன்றிணைவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமையானது எதிர்க்கட்சியின் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், இதுவே அவர்களின் கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும்.” – என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:-
“வெளியகக் காரணிகளினால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன என்பதையும், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன என்பதையும் எமது அரசு ஒருபோதும் மறுக்கவில்லை. எனினும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முறையான பல நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் படிப்படியாகக் குறையும்.
ராஜபக்ஷக்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால், பொருளாதார மீட்சிக்கு வேறு வழியின்றி இறுதித் தீர்வாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது. நிலையான பொருளாதார மீட்சியை அடைவதற்காகச் சில கடுமையான தீர்மானங்களை நாம் செயற்படுத்த வேண்டியுள்ளது.
பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது சிறந்த முன்னேற்றமடைந்துள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியமே உறுதிப்படுத்தியுள்ளது. ராஜபக்ஷக்களின் வங்குரோத்தான பொருளாதாரக் கொள்கையினால் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை ‘குறைந்த – நடுத்தர வருமானம்’ பெறும் நாடாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால், தற்போதைய எமது நிதி ஸ்திரத்தன்மையின் காரணமாக, இலங்கை மீண்டும் ‘உயர் – நடுத்தர வருமானம்’ பெறும் நாடாக உலக வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்கள் இன்று பொருளாதார மீட்சியைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. நாட்டு மக்கள் உண்மையை நன்கு அறிவார்கள்.
அரச நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களைச் சட்டம் தன் கடமையைச் செய்து கைது செய்யும்போது, எதிர்க்கட்சியினர் கடும் கலக்கமடைகின்றார்கள். அதன் காரணமாகவே அவர்கள் புதிய கூட்டணிகளை அமைக்க ஓடுகின்றார்கள்.
இனவாதிகள், படுகொலையாளர்கள் என அனைவரும் தம்முடன் இணைவார்கள் எனத் தயாசிறி ஜயசேகரவே ஒப்புக்கொண்டுள்ளார். இத்தகைய ஊழல்வாதிகளின் சுயநல அரசியல் கூட்டணியை நாட்டின் விவேகமான பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.” – என்றார்.









