அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை “eAyurvedic” எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறது.
மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
குறித்த திட்டத்தின் கீழ், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (03) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் யூ.எல்.நிகாயா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் பாலமுரளியினால் ‘eAyurvedic’ செயலியின் தொழிற்பாடுகள் மற்றும் அதன் மூலமாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










