மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான சுரேன் ராகவன், வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவரான ரில்வின் சில்வா ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்நேரத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாம் அடுத்தகட்டப் போராட்டங்களில் இறங்குவதற்கு முன்பதாக, எம்மால் கொடுக்கக்கூடிய அனைத்து அரசியல் அழுத்தங்களையும் தற்போதைய அரசுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
எனவே, வரும் 30 நாள்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.
இதேவேளை, அண்மையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி தற்போதைய அரசின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டொன்றைச் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, தற்போதைய அரசானது புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், விடுதலைப்புலிகளுக்குச் சார்பான அமைப்புகளிடமிருந்தும் நேரடியாகப் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், லண்டனில் இவ்வாறான நிதியைப் பெற ஜே.வி.பி. தரப்பு முயன்ற போதே அங்குள்ள அமைப்புகள் அதனை நிராகரித்துவிட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரமானது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பில் மிக ஆபத்தானது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ரில்வின் சில்வா ஆகியோர் நாடாளுமன்றத்துக்குள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வந்து மக்களுக்குப் பகிரங்கமாகப் பதிலளிக்க வேண்டும்.
பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்தோ அல்லது விடுதலைப் புலிகளுக்குச் சார்பான இயக்கங்களிடமிருந்தோ தற்போதைய அரசு எந்தவித நிதியையோ அல்லது உதவிகளையோ பெறவில்லை என்பதை அவர்கள் நாட்டுக்கு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும்.
அவ்வாறு அரசால் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாவிட்டால், இந்த அபாண்டமான குற்றச்சாட்டைப் பகிரங்கமாகச் சுமத்திய குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” – என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.










