பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவ்விவகாரத்தை ஒட்டிய வழக்கு இன்று மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட பின்னர் இறுதியாக சங்கீத்ஷனுக்கு சாவகச்சேரி நீதிவான் பிணையாளிகள் தொடர்பாக மூன்று நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல இன்று மாலையில் அனுமதி வழங்கினார்.
இன்று காலை பொலிஸார் இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராக சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ள சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்றும், சங்கீத்ஷனுக்கு எதிராக சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆம் பிரிவின் கீழ் அரசின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுதல் அல்லது அதிருப்தியை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டைத் தொடர தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் அந்த மனுவில் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் தரப்புக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர். அந்தக் கடிதத்தில் அதன் பிரதி சாவகச்சேரி நீதிவானுக்கும் அனுப்பப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை அடுத்து அவரை உடனடியாக விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கக் கோரி இதுவரை அவரது சட்டத்தரணியாகச் செயற்பட்ட கேசவன் சயந்தன் பிணை மனு ஒன்றைத் தாக்கல் செய்து வாதிட்டார்.
”பொலிஸார் சங்கீத்ஷனுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்வதால் அவரை உடனடியாக பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்துக்காக சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது என்பதுதான் ஆரம்பம் தொட்டு எங்களது நிலைப்பாடும் வாதமும்” என்று சுட்டிக் காட்டிய சட்டத்தரணி சயந்தன் சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆவது பிரிவின் கீழான குற்றச்சாட்டு என்றால் அது தொடர்பில் பிணை வழங்க முடியும் என்பதையும் சமர்ப்பணம் செய்தார்.
இந்தக் கட்டத்தில் இது குறித்து தீர்ப்பு வழங்குவது சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிவான் அறிவித்தார்.
மீண்டும் நீதிமன்றம் கூடும் சமயத்தில் நீதிமன்றத்துக்குச் சங்கீத்ஷனின் தாயார், ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் பிரசன்னமானார். தாம் தமது மகனுக்காக சயந்தன் அல்லாத இன்னொரு சட்டத்தரணியை மன்றில் முன்னிலைப்படுத்துகின்றார் என்று அவர் தெரியப்படுத்தினார்.
தாம் பிணை மனு தொடர்பாக சமர்ப்பணம் செய்து விசாரணை முடிந்து விட்டது, நீதிமன்றம் முடிவை வழங்கும் என்று சயந்தன் தெரிவித்த நிலையில் மன்று மீண்டும் கூடியது.
இரண்டாவது தடவை வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த விடயத்தில் சட்டமா அதிபர் அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதி தமக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் வழக்கின் மேற்படி விவகாரத்தை ஒட்டிய தீர்மானத்தை 17ஆம் திகதி புதன்கிழமை வழங்குவதாகத் தெரிவித்து விடயத்தை ஒத்திவைத்தார் நீதிவான்.
ஆயினும் பின்னர் சங்கீத்ஷனின் தாயார் அழைத்து வந்த சட்டத்தரணி மேற்படி சட்டமா அதிபரின் கடிதத்தின் நீதிமன்றத்துக்கான பிரதியை மன்றில் கிடைக்கச் செய்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் தரப்பினரும் மன்றில் பிரசன்னமாகச் செய்த நிலையில் மூன்றாவது தடவையாக வழக்கு மன்றில் அழைக்கப்பட்டது. வழக்கு மீண்டும் இன்று மாலையில் எடுக்கப்பட்ட போது சங்கீத்ஷனுக்கு நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியது.












