கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதில் மிகப் பெரும் அழுத்தமாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற பகிஷ்கரிப்பு போராட்டம் பொருத்தமாகும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது காலத்தை கடத்துவது மக்களின் இறைமையை மீறும் செயலாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் அறிக்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைய போகும் தருணத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முனைப்பு காட்டவில்லை.
மேலும், காலத்தை கடத்துவதற்கு காரணங்களைத் தேடுவதிலேயே நாட்டம் காட்டுகிறது.
மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லையே தவிர ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.
ஒன்பது மாகாண சபைகளிலும் கடைநிலை தொழிலாளர்கள் முதல் அமைச்சின் செயலாளர்கள் வரை பணியிலிருந்து கொண்டே வருகின்றனர். அவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் மாகாண சபைகள் செலவை ஏற்படுத்தும் நிறுவனங்கள் என எவராலும் விரல் நீட்ட முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து மாகாண நிர்வாகம் செயல்பட வேண்டும். நியமன ஆளுநரும், நிர்வாக உத்தியோகத்தர்களும் மக்கள் சார்பாக நின்று செயல்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. இது மிகப்பெரும் ஜனநாயக மீறலாகும்.
சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுகின்ற போது அதை சுட்டிக்காட்டி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் அவசியம்.
மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்கிய போது மேற்கொள்ளப்பட்ட அளவுக்கு தற்போது மாகாண சபைகளின் செயற்பாடு இருக்கிறதா? என்பது பெரும் கேள்விக்குறியாகும்.
மாறி மாறி வரும் அரசாங்கங்கள் தமது அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இது தருணம் அல்ல என்ற சூழல் நிலவினால் தேர்தலை பிற்போடுவதில் நாட்டம் செலுத்துகின்றன. இவ்வாறான நிலைமையை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது குறுக்கு வழி சிந்தனையின் மூலம் வித்திட்டார்.
மாகாண சபைத் தேர்தலில் தமது அரசு தோல்வி அடையும் என்பதனால் தேர்தலை ஒத்தி போடுவதற்காக தேர்தல் முறை மாற்றம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். இதற்கு நாட்டின் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணமாகும். இன்று மாகாண சபை தேர்தல்களை நடத்தும் படி அரசிடம் கையேந்தி நிற்கும் வடக்கு, கிழக்கு, மலையக, முஸ்லிம் கட்சிகள் தேர்தல் முறை மாற்றம் சட்டத்துக்கு ஆதரவு நல்கி அந்த சட்டமூலத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் இருக்கின்ற உரிமைகளில் எதையாவது இழந்தார்களானால் அதை மீண்டும் பெற்றுக்கொள்வது குதிரை கொம்பாகவே அமையும் என்பதற்கு மாகாண சபைத் தேர்தல் சட்டம் மூலமும் ஒரு உதாரணமாகும்.
எனினும் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளன. இந்த நிலைப்பாட்டை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரிப்பது மிகப்பெரும் அழுத்தத்தை கொடுப்பதற்கு உதவும் எனவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.









