களுத்துறை மாவட்டம், ஹொரணை – அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இவ்விபத்தின் போது இல்லத்தில் இருந்த மூவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் 6 பேர் கடுமையான தீக்காயங்களுடன் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட தருணத்தில், குறித்த முதியோர் இல்லத்தினுள் ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட மொத்தம் 72 பேர் தங்கியிருந்துள்ளனர்.
தீ வேகமாகப் பரவ ஆரம்பித்ததும், உடனடியாக விரைந்து செயற்பட்ட பிரதேச மக்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இல்லத்தினுள் சிக்கியிருந்த 51 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தற்போது தற்காலிகப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான அவசரத் தேவைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அங்குருவத்தோட்ட பொலிஸாரும், விசேட தடயவியல் பொலிஸ் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ஹொரணை வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போயுள்ள மூவரையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.










