ஹொரணை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த முதியோர் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் வரை இருந்துள்ளனர்.
அவர்களில் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்தின் கொடூரத்தினால் முதியோர் இல்லத்தில் இருந்த 10 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஏனையவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று காலை நடத்தப்பட்டதை அடுத்து, சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










