கண்டி, மபகந்தா பகுதியில் நாவலப்பிட்டிய, மபகந்த பிரதான வீதிக்கு அருகே இருந்த மரம் ஒன்று முச்சக்கரவண்டி மீது சரிந்து வீழ்ந்ததில், முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவர், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (04) காலை நேர்ந்துள்ளது.
விபத்தில் இருந்து முச்சக்கர வண்டி சாரதி உயிர் தப்பியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்றே முறிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
நெடுங்காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும், அதற்கு முறையான தீர்வு வழங்கப்படாதமையினாலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்து குறித்து நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









