தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற மற்றும் பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு மீண்டும் ஒருமுறை பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி மிக வேகமாக நகர்கிறது” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் டொலர் நெருக்கடி குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் தற்போதைய ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை ரூபாவை நிலையான முறையில் வலுப்படுத்துவதே எனது கடந்தகால பொருளாதாரக் கொள்கையின் முதன்மையான நோக்கமாக இருந்தது. தற்போதைய ஆட்சியாளர்கள் ஆரம்பத்திலேயே டொலரின் கட்டுப்பாட்டைத் தவறவிட்டுள்ளனர்.
அரசு ஆரம்பத்திலிருந்தே டொலரின் மதிப்பை 280 ரூபா மட்டத்தில் தக்கவைப்பதற்கான முறையான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர். இன்று டொலர் 320 ரூபா வரை சென்றுவிட்டது. அதாவது 30 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இப்போது இந்த டொலர் பற்றாக்குறையை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்று தெரியாமல் நிதி அமைச்சும் மத்திய வங்கியும் திண்டாடுகின்றன.
வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டுக்கு ஏற்படும் மிகப்பெரிய வருமானப் பற்றாக்குறையாகும்.
இந்த நெருக்கடிக்கு மிக விரைவாகத் தீர்வு காணாவிட்டால் நாடு மீள முடியாத பேரழிவைச் சந்திக்கும்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவானது, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குக் கால் உடைந்ததைப் போன்றது.
அவன் நடந்து சென்று சிகிச்சை பெறுவதற்காக எனது ஆட்சிக்காலத்தில் அவனது உடைந்த காலைக் குணப்படுத்திக் கொடுத்தேன்.
மருத்துவமனைக்குச் சென்ற பின்னர், 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவனுக்குரிய பிரதான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அதைச் செய்யவில்லை. இப்போது ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கையை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்க எடுத்த தொலைநோக்கு முயற்சிகள் அனைத்தும் குறுகிய அரசியல் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புகளால் முறியடிக்கப்பட்டன.
இந்தியாவுடன் இணைந்து சேதுசமுத்திரம் திட்டத்தையும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் பாலத்தையும் அமைக்க முழு முயற்சி எடுத்தேன்.
அந்தத் திட்டங்கள் மட்டும் தொடங்கப்பட்டிருந்தால், சுமார் பத்து வருடங்களுக்கு நாட்டில் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக நடந்திருக்கும்.
அதன் மூலம் 5 டிரில்லியன் ரூபா பெறுமதியான பொருளாதாரம் நமது நாட்டுடன் இணைந்திருக்கும்.
அதேபோல், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தரைவழியாக எரிபொருள் குழாய் இணைப்பை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டிருந்தேன். போலி காரணங்களைக் கூறி அதற்கும் இடம் கொடுக்கவில்லை.
அதைச் செய்திருந்தால், இந்தியாவுக்குக் கிடைக்கும் அதே குறைந்த சர்வதேச விலையிலேயே நமக்கும் தங்குதடையின்றி எரிபொருளைப் பெற்றிருக்க முடியும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் வர்த்தக வங்கிகளுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர். டொலரின் மதிப்பை 330 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.
விரைவில் சர்வதேச நிதியுதவியாக 1 பில்லியன் டொலர் நாட்டுக்கு வரவுள்ளதாகக் கூறியே இந்தத் தற்காலிக அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றார்கள்.
ஆனால், 1 பில்லியன் டொலர் சந்தைக்குள் வந்தாலும் பெரிய கட்டமைப்பு மாற்றம் எதுவும் நடந்துவிடாது.
இன்று உலகப் பொருளாதாரம் மாறிவிட்டது.
சர்வதேச யுத்தச் சூழல்
இன்று இந்தியாவுக்கே பொருளாதாரத்தை நகர்த்துவது சவாலாக உள்ளது.
உலகச் சந்தையில் திடீரென கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 10 டொலரால் உயர்கின்றது.
இத்தகைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இவர்கள் முழு மூச்சாக டொலரைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தப் பார்க்கின்றார்கள்.
டொலர் மதிப்பைச் செயற்கையாக ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.
இன்னும் சில காலம் சென்றதும் டொலரின் மதிப்பு மீண்டும் சந்தை விதிகளுக்கமைய வேகமாக உயர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும்.” – என்றார்.










