ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் செயற்பட்டுள்ளார்கள் என்றும் அவர்தெரிவித்தார்.
கடந்த காலத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டதன் விளைவுதான், தொடர்ந்தும் படுகொலைகள் நடைபெற்றதற்குரிய காரணமாக இருந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமாக, இந்த அரசாங்கம் தாங்கள் சரியான பாதையில், சரியான நீதியில் செல்லுகின்றோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் கங்காதரன் மற்றும் ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர்.
அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் என பலரும் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதோடு, ஈகைச் சுடர்களையும் ஏற்றி அவணக்கம் செலுத்தினார்கள்


















