மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்..
ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரம் மகாவலி ஆற்றின் பிரதான நீர் மூலமான ஹட்டன் ஓயா நதிக்குள் பாரிய அளவில் கோழிக் கழிவுகளைக் கொட்டிவிட்டு தப்பி செல்ல முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பழைய வீதி வழியாக, இரண்டு முக்கிய நீரோடைகள் சங்கமிக்கும் மகாவலி ஆற்றின் ஆரம்பப் பகுதிக்கு கோழிக்கழிவுகளுடன் ஒரு லொறி இரகசியமாக வந்துள்ளது.
அவ்வேளை அந்தப் பகுதியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹட்டன் பொலிஸார் சந்தேகமடைந்து குறித்த வாகனத்தை பின் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஆற்றில் கழிவுகளைக் கொட்டுவதற்கு தயாராக இருந்த இருவரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், லொறியையும் பறிமுதல் செய்தனர்.
ஹட்டன் நகரில் உள்ள சில இறைச்சிக் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கோழிக்கழிவுகள், கடந்த பல ஆண்டு காலமாகவே இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திருட்டுத்தனமாக இந்த ஆற்றிலும் டிக்கோயா வனராஜா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகிலும் கொட்டப்பட்டு வந்துள்ளன.
பொதுமக்கள் இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதற்கமைய பொலிஸார் எடுத்த நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட நபர்கள் உடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.















