“இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான ‘அமைதியும் அபிவிருத்தியும் நிறைந்த தேசத்தை’ உருவாக்குவோம்.
இனிவரும் காலத்தில் இந்த மண்ணில் மீண்டும் ஒருபோதும் யுத்தம் ஏற்படாதவாறு நான் பார்த்துக் கொள்வேன்.” – என்று ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் நேற்று 19 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், இம்முறை முன்னெப்போதையும் விட அதிகளவிலான மறைந்த படைவீரர்களின் குடும்பத்தினர் பங்கெடுத்திருந்தனர். ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், “அண்மைய வரலாற்றில் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகத் தோள் கொடுத்த நமது படையினருக்குத் தேசத்தின் உயரிய மரியாதையைச் செலுத்துகிறேன். தமக்காக அல்லாமல், பிறருக்காகவும் நாட்டுக்காகவும் தங்களது பிள்ளைகளை அர்ப்பணித்த வீரத்தாய்மார்களுக்கும் தந்தையர்களுக்கும் தலைவணங்குகின்றேன்.
உடல் உறுப்புக்களைத் தியாகம் செய்த எமது சகோதரர்கள் என்றும் எமது இதயங்களில் மாவீரர்களாகவே வாழ்வார்கள். யுத்தம் எவ்வளவு அழிவானது என்பதைப் படை வீரர்களாகிய நீங்கள் அறிவீர்கள். போரினால் உலகைத் துண்டு துண்டாக உடைக்க முடியும். ஆனால், அமைதியால் மட்டுமே அதனை ஒன்றிணைக்க முடியும். சடலங்களின் குவியல்களின் மேலோ அல்லது இரத்த ஆறுகளுக்கு மத்தியிலோ ஒரு மனிதாபிமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் போரின் கதையை வரலாற்றிடம் ஒப்படைத்துவிட்டு, அமைதிக்கான நிலையான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
நான் யுத்தம் நல்லதா, கெட்டதா என்று விவாதிக்க வரவில்லை; ஆனால், மீண்டும் ஒரு யுத்தம் வராமல் தடுக்கும் பொறுப்பை ஏற்கின்றேன். நமது பாதுகாப்புப் பிரிவினர் தங்களது கடமையைச் சரியாக நிறைவேற்றினர். அவர்கள் பிரிவினைவாதத்துக்கு எதிராகவே யுத்தம் செய்தார்களே தவிர, எந்தவொரு இனத்துக்கும் எதிராக அல்ல. இந்தத் தாய்நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய நாம் அனைவரும் எங்கும் வாழ்வதற்கான உரிமையைக் கொண்டது. சுயநலமிக்க, அதிகாரப் பேராசை கொண்ட அரசியல்வாதிகளின் தீவிரவாத நிகழ்ச்சி நிரல்களாலேயே மனிதர்கள் பிரிந்தனர். அரசியல் அநாகரிகமானது மனிதநேயத்தை ஒரு கால்பந்தாக மாற்றியது.
வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் பழைய, அழிவுப் பாதையைத் தற்போதைய அரசு முற்றிலும் நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக ஒற்றுமை, சட்டம், நீதி மற்றும் சுபீட்சத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்லும் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தத் திருப்புமுனையில் எவ்வளவு கடினமான சவால்கள் வந்தபோதிலும், அச்சமின்றியும் உறுதியுடனும் நான் முன்னோக்கிப் பயணிப்பேன்.
புத்த பெருமானின் அகிம்சை, எல்லையற்ற கருணை மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்ட பௌத்த தர்மத்தின் மீதே நமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை, பொலன்னறுவை, கதிர்காமம் மற்றும் யாழ் – கதிர்காமப் பாதயாத்திரை போன்ற பன்முகத்தன்மை கொண்ட கலாசாரக் கட்டமைப்பே எமது பலம். இனிமேல் விசேட வரப்பிரசாதங்களால் ஒடுக்குமுறைகளைச் செய்த சிலருக்குச் சட்டம் தன் கடமையைச் செய்வது வேதனையளிக்கலாம். ஆனால், தகுதி, திறமையுள்ள அனைவரும் சமமாக வாழும் சமுதாயமே எமது இலக்காகும்.
இளைய தலைமுறையினர் சுதந்திரமான, இறையாண்மையுள்ள நாட்டை எதிர்பார்க்கின்றார்கள். நாம் பல தசாப்தங்களாகப் பொருளாதாரப் போரிலும் மூழ்கிக் கிடக்கின்றோம். இராணுவப் போரை வென்றது போல, இந்த நாட்டை மீட்கும் பொருளாதாரப் போரையும் நாம் நிச்சயமாக வென்றெடுப்போம்.” – என்று ஜனாதிபதி சபதம் செய்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வடகல, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த, காயமடைந்த படையினரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.











