சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்துள்ளார். பின்னர் அவர் சீனாவிலிருந்து தாய்லாந்தின் பெங்கொக் நகருக்குச் சென்று, அங்கிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் தனது பயணப் பொதிகளுடன், விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள Green Channel ஊடாக வெளியேற முயன்றபோதே அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரது இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33,600 சீன தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 168 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










