நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை குறைவாக பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்த வேண்டு கோளை விடுத்துள்ளார். பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவர் கூறுகையில், ” மேற்காசிய போரானது உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. நம் நாட்டின் அந்நிய செலவாணியை சேமித்து வைக்க உதவும். நாட்டின் நலனுக்காக சில விஷயங்களை மக்கள் செய்ய வேண்டும்.
தங்கம் வாங்கும் விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். இன்னும் ஒரு வருடத்திற்கு யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம். திருமணம், விசேஷங்களுக்காக தங்கத்தை வாங்க வேண்டாம். இவ்வாறு தங்கம் வாங்குவதை நாம் குறைத்துக் கொண்டால், தங்க இறக்குமதி வெகுவாக குறையும்.
நமது அண்டை நாடுகளில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், நம் மக்களுக்கு இந்த சுமையை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசாங்கமே அதை தாங்கிக் கொண்டுள்ளது.
மற்ற நாடுகளில் முக்கிய உரமான யூரியா ஒரு மூட்டை ரூ.3,000ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பால் ஒரு மூட்டை யூரியா ரூ.300-க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.










