“வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாயம் சார்ந்த சிக்கல்களுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும். தவறினால், விவசாயிகள் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராடுவார்கள். அந்தப் போராட்டங்களுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவசாய, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சருக்கான கேள்வி – பதில் அமர்வின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக இலங்கையின் உள்நாட்டு உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய அரிசி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை வழங்கும் 2025/2026 பெரும் போகச் செய்கை ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளது.
வழமையாக 8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச் செய்கை இடம்பெறும் நிலையில், இம்முறை 6 இலட்சத்து 3 ஆயிரத்து 960 ஹெக்டேயரில் மாத்திரமே செய்கை பண்ணப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக நெல், தேயிலை, தென்னை மற்றும் பழவகைகள் உள்ளிட்ட பெருமளவிலான பயிர்கள் அழிவடைந்துள்ளன.” – என்றார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் 2026 சிறு போகச் செய்கையை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சாணக்கியன் எம்.பி. அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை முன்வைத்தார்.
2025/2026 பெரும் போக நெல் உற்பத்தி மதிப்பீடு எவ்வளவு? 2026 இல் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதா?
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட விதைகள், உரம் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் மாவட்ட ரீதியாக வகைப்படுத்திக் காட்டப்படுமா?
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் 2026 சிறு போகத்தை உறுதிப்படுத்த நீர்ப்பாசன நீர் விடுவிப்பு மற்றும் விதை நெல் வழங்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை?
சில மாவட்டங்களில் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் உரம் கிடைக்கவில்லை. உரம் விநியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ள CCC (PVT) LTD மற்றும் அரசாங்க உரக் கூட்டுத்தாபனம் விநியோகத்தைத் தாமதப்படுத்துவது குறித்து எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
மணல் கலந்த மண் என்பதால் ஏக்கருக்கு 100 கிலோ யூரியா தேவைப்படும் நிலையில், உர விநியோகத் தாமதம் விவசாயிகளைக் கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்கத் தவறினால் பாரிய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.










