கடல் தொழில் சட்டங்கள் மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்க பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் யுனைப்ஸ்(UNOPS) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் 17 ஆம் திகதி இடம்பெற்றது.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில் விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் சார் ஆய்வு மாணவன் எஸ்.திவ்யன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.
கடற்றொழில் சட்டங்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு தொடர்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முகமாக குறித்த விழிப்புணர்வு செயல் அமர்வு இடம்பெற்றது .
மீன் வளம் அருகி வரும் நிலையில் மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தும் மீனவர்கள் எதிர்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கையிலான சட்டங்கள் குறித்தும் மீனவர்களுக்கு தெளிவு படுத்தி கடல் வளத்தையும் மீன்பிடி சட்டங்களையும் கடைப்பிடித்து வளமான ஒரு கடல் வளத்தையும் கடல் பாதுகாப்பையும் மீனவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் குறித்த செயல் அமர்வு இடம்பெற்றது.
அரசாங்கத்தை, திணைக் களங்களையும் சாராமல் மீனவர்கள் தன்னிச்சையாக குறித்த வளங்களை பாதுகாத்து தமது எதிர்கால சந்ததிக்கு குறித்த வளத்தை கையளிப்பது இதன் நோக்கமாக அமைந்தது.மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வின் போது மீனவர்கள் அக்கறையுடன் செயல்பட அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட தோடு, எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான ஒரு கடல் வளத்தை கையளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது .











