இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஈரான் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளோ இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித தகவலையும் வழங்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த முக்கிய தகவலை வெளியிட்டார்.
தாக்குதல் குறித்து இலங்கை முன்கூட்டியே அறிந்திருந்ததா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
“தாக்குதல் நடத்திய தரப்போ அல்லது தாக்குதலுக்கு உள்ளான தரப்போ எமக்கு எவ்வித தகவலையும் வழங்கவில்லை. பொதுவாக இரு நாடுகளுக்கு இடையிலான போரின் போது, ஒரு நாடு மற்றைய நாட்டின் மீது நடத்தத் திட்டமிட்டுள்ள தாக்குதலை மூன்றாம் தரப்பு நாடு ஒன்றுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
தாக்குதல் குறித்த தகவல் இலங்கைக் கடற்படைக்கு எப்படிக் கிடைத்தது என்பது குறித்து அமைச்சர் விளக்குகையில், அது ஒரு திட்டமிட்ட தகவல் பரிமாற்றம் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்.
“அந்தக் கடற்பரப்பில் சில சடலங்கள் மற்றும் உயிர் காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மீட்பு நிலையத்துக்கு முதன்முதலில் தகவல் கிடைத்தது. அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கடற்படைக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப ரீதியான தகவல்கள் கிடைத்ததா என்பது குறித்து எனக்குத் துல்லியமாகத் தெரியாது.” – என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சர்வதேச போர்க்கப்பல்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவாலாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இவ்வாறான தாக்குதல்கள் நடப்பது தேசிய பாதுகாப்பிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.










