ஜிம்மி லாய் மீதான வழக்கு விசாரணையில் நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை தீர்ப்பு தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் தெரிவித்த பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கு ஹொங்கொங்கிலுள்ள சீன வெளியுறவு அமைச்சின் ஆணையாளர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேற்படி நாடுகளின் தூதுவர்கள் லாய் மீதான வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தண்டனை தீர்ப்பு குறித்து தெரிவித்துள்ள எதிர்மறையான கருத்துக்கள் குறித்து கடும் அதிருப்தியையும் உறுதியான எதிர்ப்பையும் அந்த அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் இறையாண்மையையும் ஹொங்கொங்கின் சட்ட ஆட்சியையும் மதித்து நடக்குமாறு வலியுறுத்தியுள்ள வெளியுறவு அமைச்சின் ஆணையாளர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு விடயங்கள் குறித்த பொறுப்பற்ற கருத்துக்களையும், ஹொங்கொங் மற்றும் சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்துமாறும் கேட்டுள்ளது.நகரின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஹொங்கொங் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தமை தெரிந்ததே.










