கென்யாவில் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
கென்யத் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்கில் பகுதியில் அமைந்துள்ள விடுதிப் பாடசாலை ஒன்றில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இக்கோர விபத்தில் மேலும் பல மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 71 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜூலியஸ் ஓகாம்பா தெரிவித்துள்ளார்.
கில்கில் பகுதியில் உள்ள ‘உடுமிஷி மகளிர் அகாடமி’ என்ற பாடசாலையில் வியாழக்கிழமை அதிகாலை மாணவிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 01:00 மணியளவில் சுமார் 220 மாணவிகள் தங்கியிருந்த விடுதித் தொகுதி ஒன்றில் இந்தத் தீ பரவி, அதனை முழுமையாகச் சூழ்ந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்தவுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கென்ய செஞ்சிலுவைச் சங்கத்தின் அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து உதவி வழங்கி வருகின்றனர்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியிலும் பயத்திலும் சில மாணவிகள் அருகில் உள்ள பகுதிகளுக்குத் தப்பியோடியுள்ளனர்.
“நள்ளிரவில் பயந்து ஓடிய மாணவிகளைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என பொலிஸ் தளபதி மசூத் முவினி தெரிவித்துள்ளார்.
தற்போது பாடசாலை வளாகம் முழுமையாக பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பெற்றோர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
விடுதியின் மேல் தளத்தில் இருந்த சில மாணவிகள், தீயிலிருந்து தப்பிப்பதற்காக கீழே குதித்ததாலேயே காயமடைந்துள்ளனர் என சம்பவ இடத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், “உயிரிழந்த 16 மாணவிகளின் விபரங்களைச் சேகரிக்கும் அதேவேளையில், ஒட்டுமொத்த கென்ய மக்களும் இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அனைவரும் பொறுமைகாத்து, வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கென்யாவில் உள்ள விடுதிப் பாடசாலைகளில் தீ விபத்துகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.










