ஜனாதிபதி இனவாதமில்லை என கூறினாலும், அதற்கு மாறான செயற்பாடுகள் வடகிழக்கில் நடைபெறுகின்றன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
கல்வி சீர்திருத்தம் முக்கியமானதாக இருந்தாலும், சமூகக் கல்வி மற்றும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் மறைக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கையெனவும் அவர் தெரிவித்தார்.
இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து நம்பிக்கையளிக்கும் சூழ்நிலை இருந்ததாகவும், ஆனால் 2026 ஆம் ஆண்டில் அந்த நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் தற்போதைய அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், வனஇலாகா, மகாவலி மற்றும் தொல்பொருள் திணைக்களங்கள் ஊடாக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும், பெரும்பான்மை சமூகத்தினருக்கே சாதகமான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கல்வி மறுசீரமைப்பின் பெயரில் ஒருதரப்பு வரலாறே மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதாகவும், தமிழ் மன்னர்கள் மற்றும் தமிழர்களின் பூர்வீக வரலாறு திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவும் கூறிய அவர், இது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அடையாளமே அழியச் செய்யும் அபாயத்தை உருவாக்கும் என எச்சரித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உண்மையிலேயே இனவாதமற்ற ஆட்சி எனக் கூறினால், தமிழர்களின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ளடக்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.










