மேய்ச்சல் தரை இன்மையால் அவதியுறும் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சிறுக்கண்டல் பகுதியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக நானாட்டான் பிரதேசத்தில் சுமார் 30,000 வரையான கால்நடைகள் காணப்படுகின்ற போதும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையின்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதேவேளை கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பெறுவது தொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்று நிலுவயில் உள்ளதாகவும் இதன்போது கால்நடை வளர்ப்பாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு குறித்த வழக்கில் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்ததாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்அவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்குத் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு குறித்த வழக்கின் தற்போதைய நிலைதொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அதேவேளை கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கையூடாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கூடிய விரைவில் மேய்ச்சல் தரையினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கோரிக்கையினையும் முன்வைத்தார்.
அந்தவகையில் குறித்த வழக்கு விவகாரம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும், கூடிய விரைவில் நீதிமன்ற நடவடிக்கையினூடாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுப்பதற்கு தம்மாலும் உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு தொலைபேசியூடாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்தச் சந்திப்பில் முன்னாள் நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் தி.பரன்சோதி அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















