யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில், அரச செலவில் அவருடைய உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் சூரியன் செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்தது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவிப்பதற்காக மரண தண்டனை கைதிகள் அனைவரும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் கடந்த திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
பிரேத பரிசோதனையின் பின்னர், உடலத்தை பொறுப்பேற்பதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியைப் பெற்று உடலம், அரச செலவில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.










