மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் மாகாண சபைத் தேர்தல் சட்டத்திருத்தம் மற்றும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் என்பன தொடர்பில் ஆராயும் நோக்கில் கடந்த 6 ஆம் திகதி விசேட சந்திப்பொன்று நடைபெறவிருந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கோரிக்கைக்கு அமைவாக அச் சந்திப்பு எதிர்வரும் வாரத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணை அண்மையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியனால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அப்பிரேரணை 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தன்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணைகளின் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதனால் அப்பிரேரணை குறித்து மீண்டும் புதிதாக ஆராயவேண்டிய அவசியமில்லை என்றும், ஆகவே அதனைப் நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இரு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற சபைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தின்போது மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்து எதிர்ப்பு வெளியிடவேண்டிய அவசியமில்லை எனவும், மாறாக அதற்கான அங்கீகாரத்தை விரைந்து வழங்குமாறும் அமைச்சர் சந்தன அபேரத்னவிடம் சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்தோடு இது குறித்துக் கலந்துரையாடுவதற்கு பிரத்தியேக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு சாணக்கியனால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து கடந்த புதன்கிழமை (6) அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கும், இவ்விவகாரத்தில் அக்கறையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் சந்திப்பை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அன்றைய தினம் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கான தவிசாளர் தெரிவு உள்ளிட்ட காரணங்களால் அக்கூட்டத்தில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டதாகவும், எனவே தனது கோரிக்கைக்கு அமையவாக அக்கூட்டத்தை எதிர்வரும் வாரம் ஏதேனுமொரு தினத்தில் நடாத்துவதற்கு அமைச்சர் இணங்கியதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.










