விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி பரிசோதனை செய்வதற்கு விளையாட்டு விஞ்ஞானத்துறை சார்ந்த வைத்தியர்களை மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (07.08.2025) நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் சுனில்குமார கமகே தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு உடற்தகுதி மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட வைத்தியசாலைகளில் இதற்கான விசேட மருத்துவர்கள் இல்லை. எனவே விளையாட்டு விஞ்ஞானத்துறை சார்ந்த வைத்திய நிபுணர்களை அல்லது அது தொடர்பான பயிற்றப்பட்ட வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்ட வைத்தியசாலைகளில் இவ்வாறான பயிற்றப்பட்ட வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்குத் தொகுதி தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பினார். இந்த விளையாட்டரங்குத் தொகுதி நவீன வசதிகளைக் கொண்டது. எனினும் நீண்டகாலமாக அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் இதுவரையில் வேலைகள் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. எனவே அதனை விரைவில் முடித்து பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கவேண்டும். அத்துடன் இந்த விளையாட்டரங்குத் தொகுதியை பராமரிப்பது யார் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.











