கிளிநொச்சி என்ற பெருநகர அபிவிருத்தியின் ஆரம்பமே கனகபுரம் முதல் சேவியர் கடைச்சந்தி வரையான வீதி அபிவிருத்தி வர்த்தகர்கள் தங்களின் சுய நலங்களை மறந்து பொது நலனாக சிந்தித்து ஒத்துழைப்பு வழங்குங்கள் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் இன்று 08.08.2025 நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
கனகபுரம் முதல் கிருஸ்ணபுரம் வரையான இருவழிப்பாதை அபிவிருத்திக்கான ஆரம்ப கட்ட பணிகளின் முதல் கட்டமாகவே நேற்றைய தினம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள் சேர்ந்து அகற்ற முற்பட்ட போது முரண்பாடுகள் ஏற்பட்டன.
2017ம் ஆண்டே குறித்த வீதி அபிவிருத்தி இடம்பெறுவதற்குரிய சந்தர்ப்பம் இருக்கும் என்ற நிலையில் வீதியின் மையத்திலிருந்து நூறு அடிக்கு அப்பால் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என அப்போதைய செயலாளரினால் நீதிமன்ற அனுமதி கூட பெறப்பட்டிருந்தது. வர்த்தக சங்கம் மற்றும் சேவைச்சந்தை வர்த்தகர்கள் நீண்டநாள் கோரிக்கையை கூட முன்வைத்திருந்தனர். நடை பாதை வியாபாரிகளினால் தமது வாழ்வாதாரம் பாதிப்பதாக தெரிவித்தனர். அதற்கு அமைய சபையின் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு 37 உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடனே நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றுவதாக தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் மூன்றிற்கு மேற்பட்ட தடவைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அகற்றப்படாமையினாலே நேற்றையதினம் திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது முரண்பாடுகள் ஏற்பட்டன.
தொடர்ந்து வர்த்தகர்களுடன் பேசி குறித்த அபிவிருத்தி முன்னெடுப்பதற்கு அரசியல் காழ்புணர்ச்சிகளை தவிர்த்து பொது நலமாக சிந்தித்து கிளிநொச்சி பெருநகர அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருந்தார்.










