பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆவது டி20 போட்டி நேற்று (03) நடந்தது. நாணயற்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 40 ஓட்டங்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட் டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பிராவோவின் சாதனையை முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பிராவோவை (78 விக்கெட்), பின்னுக்குத் தள்ளி ஹோல்டர் (81 விக்கெட்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










