ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 65 ஆறு ஓட்டங்களை (சிக்ஸர்களை) விளாசி, உலக அளவில் டி20 தொடர் ஒன்றில் அதிக ஆறு ஒட்டங்களை அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2012 ஐபிஎல் தொடரில் 59 ஆறு ஓட்டங்களை அடித்திருந்த கிறிஸ் கெய்லின் (Chris Gayle) வரலாற்றுச் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் இந்தச் சாதனைக்கு 456 பந்துகளை எதிர்கொண்டிருந்த நிலையில், சூர்யவன்ஷி வெறும் 266 பந்துகளிலேயே இதனை அதிரடியாக முறியடித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான வெளியேற்றும் (Eliminator) சுற்றில் வெறும் 29 பந்துகளில் 97 ஓட்டங்களைக் குவித்த சூர்யவன்ஷி, பல அசாத்திய சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதில் 16 பந்துகளில் அவர் அடித்த அரைசதமானது, ஐபிஎல் பிளே-ஓஃப் (Playoffs) வரலாற்றில் அதிவேக அரைசதம் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையைச் சமன் செய்துள்ளது.
இந்த இன்னிங்ஸில் அவர் அடித்த 12 ஆறு ஓட்டங்கள், ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டி ஒன்றில் ஒரு துடுப்பாட்ட வீரர் அடித்த அதிகூடிய ஆறு ஓட்டங்கள் என்ற சுப்மன் கில்லின் சாதனையைத் தகர்த்துள்ளது.
மேலும், இதில் முதல் 10 ஆறு ஓட்டங்களை வெறும் 24 பந்துகளில் எட்டி, ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 10 ஆறு ஓட்டங்களை அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையைத் தவிடுபொடியாக்கியுள்ளார்.
இந்தத் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 242.85 என்ற அசுரத்தனமான சரசரி ஆட்ட விகிதம் 680 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 க்கும் அதிகமான சரசரி ஆட்ட விகிதத்துடன் 600 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை ஒரு தொடரில் எடுத்த முதல் வீரர் இவரேயாவார்.
அத்துடன் பவர்பிளே ஓவர்களில் மட்டும் இந்த சீசனில் 490 ஓட்டங்களை விளாசி, 2016 இல் டேவிட் வோர்னர் நிலைநாட்டியிருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
புதன்கிழமை நடந்த போட்டியில் 334.48 என்ற சரசரி ஆட்ட விகிதம் விளையாடிய சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் 90 க்கும் அதிகமான ஓட்டங்களை அதிகூடிய சரசரி ஆட்ட விகிதத்தில் எடுத்த வீரர் என்ற புதிய சரித்திரத்தையும் படைத்துள்ளார்.










