சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பிளே – ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால், எம்.எஸ். தோனி மீண்டும் அணியில் இணைவார் என்று துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹசி உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டைவிரல் காயம் காரணமாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான கடைசி லீக் போட்டியிலும் தோனி விளையாட மாட்டார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததால், பிளே – ஓஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
எனவே இன்று நடைபெறவுள்ள குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இதில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைப் பெற்றாலும், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இது குறித்துப் பேசிய மைக் ஹசி, தோனியின் காயம் தற்போது குணமடைந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த லீக் போட்டியில் அவர் விளையாடாவிட்டாலும், பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறினால் நிச்சயமாக அணியில் இணைவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த போட்டியின் ஏமாற்றத்திலிருந்து மீண்டு, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே அணியின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.










