யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் இரண்டாவது நாளாக இன்றும் (7)அளவீடு செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/ 435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக நேற்று (6)அளவீடு செய்யப்பட்டுள்ளது.
தங்களுடைய சொந்தக் காணிகள் கடற்படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு இருந்த ஒரு சில மக்கள் கடற்படையிடம் கேள்வி எழுப்பிய போது உங்களுடைய காணி என்றால் அனுமதிப் பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர்.
அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன வீடுகள், கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன.
இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ, வடமாட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி கடற்படையால் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.












