சுமந்திரனின் வழக்கால் காணி உரித்து தொடர்பான வர்த்தமானி நிறுத்தப்பட்டாலும், அரச உத்தியோகத்தர்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொது மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி காணி உரித்து தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாய காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்கே தெரிவித்தார்.
வவுனியாவில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் காணி பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றது. ஒரு புறத்தில் மக்களுடைய காணிக்கான உரித்து இழக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காணிகளை பயன்படுத்த முடியாத நிலைமையில் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் இராணுவத்தினராலும், பாதுகாப்பு தரப்பாலும், வனவளத் திணைக்களத்தாலும் கையகப்படுத்தப்பட்ட காணிகளும் காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கலந்துரையாடி அந்த காணிகளை மக்களுக்கு மீள வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உள்ளோம்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி விவசாயக் காணிகளில் பெரும் பகுதியானவற்றை விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். ஏற்கனவே அவை வனவளத் திணைக்களத்திற்குரித்தானதாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் விவசாயிகளுக்காக அதனை மீள வழங்குவதற்கு வனவளத் திணைக்களம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகள் மீள பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை காலமும் எம்மிடம் விவசாயம், கால்நடை, காணி விடயங்களை உள்ளடக்கி ஒன்றிணைந்த வேலைத்திட்டம் இருக்கவில்லை. தற்போது அது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இனி வரும் காலங்களில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இதனை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
வவுனியாவில் 40 வீதமான வறுமைக்குட்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாக இருந்தால் உற்பத்தி பொருளாதாரம் மேம்பட வேண்டும். நாங்கள் இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது வறுமையை இல்லாது ஒழிப்பதற்காகவே. வவுனியா மாவட்டத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் தான் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டய்திற்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படும்.
வட மாகாணத்தில் உள்ள காணி உரித்து தொடர்பாக நாங்கள் ஒரு விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இருந்தோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வர்த்தமானி தற்போது கைவிடப்பட்டிருக்கிறது.
எனினும் நாங்கள் அரச உத்தியோகத்தர்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி காணி உரித்து தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.


