வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் ஒரு பெண் உட்பட இருவரை நேற்று (24.06.2025) பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பிரபல போதை வியாபாரி என சந்தேகிக்கப்படும் பிறைந்துரைச்சேனை 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் நாவலடி பிரதேசத்திலும் மாவடிச்சேனை பசீர் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் பிரதான வீதி வாழைச்சேனையிலுள்ள அவரது வர்த்தக நிலையத்தில் வைத்தும் நேற்று (24.06.2025) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி திரு எஸ்.எம்.லசந்த பண்டார வழிகாட்டல் ஆலோசனையின் பேரில் ஊழல் ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி கே.எஸ்.பி அசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
பெண் சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 2650 ரூபாய் பணமும் ஹெரோயின் போதைப்பொருள் 5750 மில்லி கிராம் கண்காணிப்பு கமெரா சேமிப்பகம் (CCTV) என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 5 670 மில்லி கிராமிம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
பெண் வியாபாரி 40 வயதுடையவர் என்றும் அவர் நீண்டகாலமாக வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நவடிக்கையின் பின்னர் விடுதலையாகியிருந்தார். இருந்தபோதிலும் அவர் தனது வியாபர நடவடிக்கையினை பொலநறுவை வீதி நாவலடி பகுதிக்கு இடம்மாற்றி மேற்கொண்டு வந்த நிலயில் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் அவர் அதே இடத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
மற்றைய நபர் வாழைச்சேனை மாவடிச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவர் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததோடு போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தொரிவித்தனர்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபராத்தில் ஈடுபட்டு வந்த நபர்கள் இவர்களாகும். இவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு ஆர்பாட்டங்களை நடாத்தி வந்திருந்த நிலையில் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.















