சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீடை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இயற்கை மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களை மனிதன் அழிப்பதன் விளைவுகளை இன்று ஒட்டுமொத்த உலகமும் அனுபவித்து வருகின்றமை கண்கூடாகத் தெரிகின்றது. அதற்கு இலங்கை நாடும் விதிவிலக்கல்ல. ஆகவே எதிர்கால சந்ததிக்காக எமது இயற்கை வளங்களை நன்முறையில் கையாள வேண்டியது எமது கடமையாகும்.
13ம் திருத்தத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பனது அட்டவணை 9 இன் 1ஆம் மற்றும் 3ஆம் நிரலுடன் தொடர்புடைய விடயமாகும்.
நிரல் 1இல் குறிப்பிடப்பட்ட உள்ளூராட்சி விடயப்பரப்பானது முற்றுமுழுதாக மாகாண நிரலில் உள்ள விடயமாகும். அத்துடன் நிரல் 1இன் 37ஆவது விடயமாக குறிப்பிடப்பட்ட நாடாளுமன்றால் ஆக்கப்பட்ட சட்டத்தினால் அல்லது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மாகாணத்தின் சூழலை பாதுகாக்கும் பொறுப்பு மாகாணத்திற்குரியது. அதேபோல நிரல் 3 இல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மறுக்கும் மாகாணத்திற்கும் பகிரப்பட்ட அதிகாரமாக உள்ளது.
எனவே, ஒன்பதாம் அட்டவணையை திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்காக சட்டமூலம் எதுவும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு இடப்படமுன்னர் அரசியலமைப்பின் 154(ஏ) 2 இல் கூறப்பட்டவாறு அச்சட்டமூலம் மீதான மாகாண சபையின் கருத்துரைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அவர்கள் மாகாணசபைக்கு வழங்கவேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு நடைபெறவில்லை.
சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சட்டமா அதிபரின் எழுத்துமூல அனுமதியுடன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பித்ததாக கூறினார். சபைக்கு நான் சொல்லவரும் விடயம் நீங்கள் சட்டரீதியாக செயல்பட்டிருந்தாலும் நாட்டின் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்பதே.
கடந்தகாலத்தில் பசில் ராஜபக்ச திவிநெகும சட்டத்தை கொண்டுவந்து மாகாண அதிகாரங்களை பறித்தார், ஆனால் மாகாணங்களுக்கு அறிவித்துவிட்டுத்தான் பறித்தார். இன்று அதுவும் நடைபெறவில்லை.
நடைமுறையில் உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆவன செய்யாமல் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பது உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை மீறுவதோடு இந்தநாட்டில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களின் அரசியல் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இப்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான மனிதவள மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளதா என கேட்க விரும்புகிறேன்.
மனிதனால் உருவாக்கப்படும் கழிவுகளை முறையாக கையாளும் திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டும். அந்த பொறுப்பை கையாளும் உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
ஆகவே சட்டத்தை திருத்தமுன் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
இன்று(நேற்று) காலை கெளரவ சாணக்கியன் அவர்கள் சுட்டிக்காட்டியவாறு கனிமங்கள் அகழ்வது முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை. இதனால் சூழல் பாதிப்பு ஏற்படவில்லையா என கேட்க விரும்புகிறேன்.
வவுனியாவின் வடகிழக்கில் குடியேற்றப்பட்ட மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய பல ஆயிரம் ஏக்கர் அடர்ந்த காட்டை அழிக்க அரசு முடிவெடுத்தது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது மாற்று திட்டங்களினூடாக தேவையான நீரை வழங்கக்கூடிய சாத்தியம் உள்ளபோதும் எந்தவிதமான சுற்றுச்சூழல் கரிசனையும் இல்லாது “கிவுலோயா நீர்ப்பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு 2026ம் ஆண்டின் பாதீட்டில் பணத்தை ஒதுக்கியுள்ளது. அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா?
வவுனியா பம்பைமடுவில் பல ஏக்கர் ஒதுக்குக் காட்டை சில வியாபாரிகள் வனவள திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முற்றாக அழித்துள்ளனர். அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா?
இடம்பெயர்ந்த மக்களை தமது காணிகளில் குடியேறவிடாது தடுக்கும் வனவள திணைக்களம், விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் வனவள திணைக்களம் இவ்வளவு பாரிய காடழிப்பு நடைபெறும்போது எங்கிருந்தார்கள்? இந்த விடயத்தை கடந்த மாதம் இதே சபையில் முன்வைத்தேன், இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இங்கு பாரிய பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது, வேலியே பயிரை மேய்கிறது.
எமது பிரதேசத்தில் கிரவல், மணல் மற்றும் கருங்கல் அகழ்வு அரச அனுமதியுடன் நடைபெறுகிறது. அவ்வாறு அகழப்படும் பிரதேசங்களில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. இவற்றை கண்காணிப்பது யார்? ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு பொறுப்புக்கூறுவது யார்?
பிரதான வீதிகளில் உள்ள பெரிய மரங்கள் வெட்டியகற்றப்படுகிறது.
வீதியில் பயணிக்கும் மக்களுக்கு நிழல் கொடுத்த அந்த மரங்களை வெட்டியகற்றும் திணைக்களங்கள் பதிலாக நிழல் மரங்களை நடுகிறார்களா? இதற்கு பொறுப்புக் கூறுபவர்கள் யார்?
புத்தளத்தில் இருந்து மன்னார் செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது. அதனால் மக்கள் 90 கிலோமீற்றர் கூடுதலான தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது. ஒரு நாளிற்கு அவ்வீதியால் 100 வாகனங்கள் பயணம் செய்தால் 9000 கிலோமீற்றர் தூரம் ஒருநாளிற்கு மேலதிகமாக பயணம் நடைபெறும். இந்த மேலதிக தூரத்தை கடக்க எரிக்கப்படும் எரிபொருளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் அமைச்சர் அவர்கள் அறிவாரா?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் சாட்டில் உள்நோக்கங்கள் கொண்ட முடிவுகள் எடுக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவில் சில பிரதேசங்களை பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக பிரகடனப்படுத்தியதால் அங்குவாழும் மக்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது தொழில் செய்வதற்கு அவர்களுக்கு “பாஸ்” நடைமுறை உள்ளது. ஏன் அவ்வாறு செய்யவேண்டும்?
அதேபோல மடு பிரதேசத்தில் உள்ளூர் ஒழுங்குகளை கவனத்தில் எடுக்காது அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை கருத்தில் கொள்ளாது வனவிலங்கு சரணாலயமாக இருந்த பிரதேசத்தை “மடு தேசிய பூங்காவாக “ அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்திற்குள் 200 கி.மீ உள்ளூர் வீதிகள் உள்ளது, மக்கள் வாழுமிடங்கள் விவசாய நிலங்கள் உள்ளது. தற்போது தேசிய பூங்காவாக பிரகடனப்ப்படுத்தப்பட்டதால் வீதி பராமரிப்பிலிருந்து அன்றாட தேவைகளை பூர்த்திசெய்வதில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளது. எனவே பகிரப்பட்ட அதிகாரங்களை பறித்தெடுக்காது ஏற்கனவே உள்ள சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறான நடவடிக்கைகள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமன்றி, நிலையான அபிவிருத்தியையும் எதிர்கால சந்ததியினரின் நலனையும் உறுதிப்படுத்தும் என தெரிவித்தார்.










