கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
“கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டமானது இன்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கான்கிரீட் ரீதியாக மாற்றும் வேலை திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
615 மீட்டர் நீளம் கொண்ட இந்த வீதியானது 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாத செயற்பட்டமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்ததுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.ஜே.முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பி.பரதன், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா, திணைக்கள அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு,
பாதைகள் மற்றும் பாலங்கள் அமைப்பது தொடர்பில் எங்களது முதலாவது கன்னி வரவு செலவுத் திட்டத்தில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக 14 பில்லியன் ரூபாய்களை நாங்கள் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். அதன் ஊடாக பல ஆயிரம் வீதிகளை அமைப்பதற்காக குறிப்பாக கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக முன்னாயத்தம் மேற்கொண்டு இருக்கின்றோம்.
அதேபோன்று இன்றைய தினம் எமது வீதி அபிவிருத்தி அமைச்சின் விமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையின் கீழ் இன்று முதலாவது வேலை திட்டமாக நாடு பூராகவும் இந்த வேலை திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இந்த வீதியினை முதலாவதாக ஆரம்பிப்பதற்காக வேலைகளை முன்னெடுத்திருந்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 14 வீதிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான எதிர்கால வேலைத் திட்டங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் நாங்கள் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று பல விடயங்களை எதிர்க்கட்சியினரும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்.
அந்த அடிப்படையில் கிராமிய வீதிகளை கிராமப்புற மக்கள் எதிர்நோக்குகின்ற வீதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இந்த திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இன்னும் பல விடயங்களை நாங்கள் செயல்படுத்த தயாராக இருக்கின்றோம். வீதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் நாங்கள் அனைத்து வீதிகளையும் புனரமைப்பதற்கும் வீதிகளை அமைப்பதற்காகவும் நாங்கள் வேலைகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி நிதிகளை நாங்கள் கோரி இருக்கின்றோம். அதனூடாக கூட இந்த வீதிகளை செப்பனிடுவதற்கு விதிகளை அமைப்பதற்கான பாலங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
அரசாங்கம் என்கின்ற செய்தியில் ஜனாதிபதி அவர்கள் கடந்த காலங்களில் அவரது செயற்பாடுகள் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு பெற்ற ஜனாதிபதியாக இருந்திருக்கின்றார். மக்களின் ஒரு பிரதிநிதியாக மக்களின் ஆதரவை பெற்ற ஒரு ஜனாதிபதியாகவும் அவர் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். ஆகவே மக்கள் நலம் சார்ந்ததாக இந்த தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு கொண்டிருக்கின்றது.
உங்களது தேவைகளை நாங்கள் அறிந்து அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு இருக்கின்றோம். ஆகவே இவ்வாறான வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்த உங்களது ஆதரவு தேவை அதேபோன்று இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்காகவும் இந்த நாட்டை செழிப்பாக மாற்றி அமைப்பதற்கான ஒரு முயற்சியாகவும் முதல் கட்டமாக இந்த விடயங்களை செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆகவே இந்த நிகழ்வு இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது இந்த புதிய காலத்திற்குள் இந்த வீதிகள் அனைத்தும் பூரணப்படுத்தப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.









