ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்கள் கிடைத்திருப்பதானது, ஈரோஸ் அமைப்பின் 50 வருட வரலாற்றிலும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் 10 வருட நிறைவிலும் மிக முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கின்றோம்.
எமக்கு வாக்களித்தவர்களை சாதாரணமாகக் கணிக்க முடியாது. பணமும், மதுவும், இலவசங்களும் வாக்காளர்களை கவசமிட்டிருந்தாலும் கூட, அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு தூய்மையான, நேர்மையான அரசியல் செயற்பாட்டாளர்ளின் தேவையை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு வாக்களித்து தமக்கு மூன்று பிரதிநிதிகளை நியமித்து கொள்ளும் வகையில் வாக்களித்தவர்களுக்கும், வாக்குச் சேகரித்தவர்களுக்கும், வேட்பாளர்களாக களமிறங்கிய சமூக பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மூன்று உறுப்பினர்களுக்கூடாக மக்களுக்கு எந்தளவு பணியாற்ற முடியுமோ அதை நிறைவேற்றுவோம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணி சார்பாக பிரதேச சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஹட்டன் குடாகம கஜானி விருந்தினர் மண்டபத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய தலைவர் சு.புவனேஸ்வரன்(ராஜா) தலைமையில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-
மலையகத்தில் எமக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் அங்கீகாரத்தை நாம் சாதாரணமாக நினைக்கவில்லை. இதற்கு பின்னால் எமது தோழர்களின் மிகப்பெரிய தியாகங்கள் நிறைந்திருக்கின்றது.
மலையகத் தமிழர்கள் மிகமோசமான ஒடுக்கு முறைகளுக்குள்ளும் அவர்களின் இருப்பு, பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இயக்க அரசியலை வரித்துக் கொண்டு தங்களின் உயிரையும் தியாகம் செய்ய துணிந்த ஈரோஸ் தோழர்களின் எழுச்சியில் உதித்தது தான் ஈரோஸ் ஜனநாயக முன்னணி. இங்கு மக்களின் விடுதலை, விடிவு மட்டுமே எங்களது இலக்காக இருந்தது. அரசியலை பயன்படுத்தி பணம் உழைப்பவர்களுக்கான இடமாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஒருபோதும் இருக்காது. அரசியலை சமூகப் பணியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அமைப்பாக செயற்படுவதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி எப்போதும் பின்நிற்காது.
இந்த மூவரையும் நாம் பிரதேசபை உறுப்பினர்கள் என்பதற்கப்பால் இந்த நாட்டின் உச்ச சபையான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிகராகப் பார்க்கின்றோம். இந்தப் பொறுப்பை அடையாளமாக வைத்துக் கொண்டு ஊழலற்ற உள்ளூராட்சியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுவோம்.
எல்லை கடந்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்வோம். அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்போம். வட்டாரங்களில் வெற்றி பெற்றவர்கள் தமது வட்டாரங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான அழுத்தத்தை கொடுப்பவர்களாக செயற்படுவோம். அபிவிருத்தி செயற்பாடுகளுக்கப்பால் மக்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அடுத்தடுத்த தேர்தல்களில் சோரம் போகாத வாக்காளர்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வோம். மக்கள் யாருடைய வற்புறுத்தலுமின்றி வேட்பாளர்களை மதிப்பீடு செய்து, சுயமாக வாக்களிக்கும் போதுதான் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையாக, தூய்மையாக பணி செய்யக்கூடிய பிரதிநிதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எமக்கு வாக்களித்தவர்களை சாதரணமானவர்களாக நினைக்கவில்லை. பகுத்தறிந்து வாக்களிக்க தெரிந்த அரசியல் தெளிவு பெற்றவர்களாகவே கருதுகின்றோம். அவர்கள் முழுமையாக எம்மை அவதானித்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் எங்களை அவதானித்து கொண்டிருக்க வேண்டும். எங்களில் யாராவது மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக எமது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். அப்போது நாம் “மீள அழைத்துக் கொள்ளும்” கலாசாரத்தை அறிமுகப்படுத்துவோம்.
பெருந்தோட்டப் பகுதி மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிப்பதற்காக மட்டுமல்ல, பிரதேசசபை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் உரித்துடையவர்கள். நாம் பிரதேசசபை சேவைகளை முழுமையாக பெருந்தோட்டங்களுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழுவீச்சுடன் செயற்படுவோம் என்றார்.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் திருக்கோணமலை மாவட்ட பொறுப்பாளருமான கமலச்சந்திரன், மலையகப் பிராந்திய மற்றும் ஊரக வட்டார கிளை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினராக ஜீவன் இராஜேந்திரனும், அக்கரப்பத்தனை பிரதேசசபை உறுப்பினராக தேவராஜ் சிவக்குமாரனும், கொட்டக்கலை பிரதேச சபை உறுப்பினராக கணேசன் இராஜேந்திரனும் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.